கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு

கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது
முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான்,
வேட்டுவதியரையன்,ஊராளி,நாடாழ்வான்,
முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.

ஆதாரங்கள்
கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,வெங்கம்பூர்,திருச்செங்கோடு,ஈரோடு,ஏழூர்,மூக்குத்திபாளையம்,பருத்திபள்ளி,வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,அவினாசி,திருமுருகன் பூண்டி,இரும்பறை,பழமங்கலம்,அந்தியூர்,சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம்,திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர்வபட்டயமும், இலக்கியங்களும்
வேட்டுவர்
பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.

பூர்வீகம்
இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார்.
புராணங்களும்,பழங்கதைகளும் இவர்களை குருகுலத்தவர் எனச் சுட்டும்.சைவ நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரின் கால்வழியினரே வேட்டுவர் எனக்கருதுவோரும் உண்டு.இருப்பினும் இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் (ஆதிகுடிகள்) என்பதுறுதி.
வேட்டுவர் பிரமனால் படைக்கப்பட்ட ஆதிவமிசத்தார் என்று வேளாளர் புராணம் கூறும்.வேறு சில பட்டயங்கள் வேட்டுவர் முத்தரையரின்(முத்துராஜா) கால்வழியினர் எனச்செப்புகின்றன.முத்தரையரும், வேட்டுவரும் கண்ணப்பநாயனாரைத் தமது குலதெய்வமாக
வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,வேட்டுவர்,வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.

இவர்களுள் 1.வேட்டுவன், 2.வேடன், 3.காவிலவன், 4.மாவிலவன், 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும் குகை ஓவியங்களும் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் வேட்டைக்காட்சிகள், வேட்டுவரின் வாழ்கை முறையைச் சித்திரிப்பதாகவே உள்ளன.கொங்கு நாட்டில்
காணப்படும் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுகற்களும், பெருங்காலச் சின்னங்களும் வேட்டைத் தொழிலை
மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும்.


சங்க காலம்
சங்க காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதையும் ஆடுமாடு மேய்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர்.அதே சமயத்தில் சிலர்
போர்ப்படைகளில் வீரர்களாகப் பணிபுரிந்து,தமது வில்லாற்றலை வெளிக்காட்டினர்.அதே காலகட்டத்தில் வேட்டுவ குழுத்தலைவர்
சிலர் குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்தனர். எடுத்துக்காட்டாகக் கோடை மலைத் தலைவனான கடிய நெடுவேட்டுவன்,தோட்டி மலைதிதலைவனான கண்டீரக்கோப் பெருநற்கிள்ளி,கொல்லி மலைத்தலைவனான வல்வில் ஓரி,கொடுமுடி முதலியோரைச் சுட்டலாம்.
சிலர் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும் விளங்கினர்.

முன்னேற்றம்
ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருள் பலர்,சிலகாலம் சென்ற பின்னர்
ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர்.உணவு தேடும் நிலையை விட்டு உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர்.சமவெளிகளில்
வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர்.இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.இவர்களை வெளாளர்(வேளாளர்)
என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள், இடைக்காலத்தில் வேளாண்மையில் நாட்டம் கொள்ளும் அளவிற்கு உயர்ந்தனர்.

சோழர் காலம்
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இதனால்
வெள்ளாளர் என்போர் வேட்டுவரின்றும் தோன்றியவர்களே என்பது புலனாகும். சிலர் மட்டும் வேட்டுவர்களாகவே இருந்தனர். இதன்
விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள், சோழரது படைத்தலைவர்களாக மாற்றப்பட்டனர். சோழர்கள் கொங்கு நாட்டில் வேளாண்மையைப்பெருக்க பல அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். சோழரின் ஆதிக்கம் கொங்குநாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனலாம். கி.பி.பத்தாம் நூற்றாண்டளவில்
தொண்டை நாட்டிலிருந்தும், சோழநாட்டிலிருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட வேளாளர்கள்(கொங்கு வேளாளர்) நீர்ப் பாசனத்துடன் கூடிய விவசாயத்தை விரிவுபடுத்தனர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிட பெறுகின்றனர்
என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை
கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி, உணவுப் பொருள்களை
உற்பத்தி செய்து,பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை
சிறிது தாழ்ந்தது. சில இடங்களில் வேட்டுவர்க்கும், வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில்
இருவர்க்குமிடையே சமரசமும், சமாதானமும் ஏற்பட்டன. வேட்டுவரின் நில உரிமைகளும்,கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும்
வேளாளர் கைக்கு மாறின.வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், வேளாளரின் பொருளாதார உயர்ச்சி
ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.

வேட்டவூர்,பூலுவ ஊர்,பூலுவ நாடு
வேளாளரைப் போன்று வேட்டுவரும் தமக்கெனத்தனியான சமூக அவைகளைக் கொண்டிருந்தனர்.வேளாளர் ஊர் அளவில் வெள்ளாளனூர்
(வேளாளர் ஊர் அவை) அமைப்பைப் பெற்றிருந்தது போன்று வேட்டுவரும் வேட்டவூர் (வேட்டுவர் ஊர் அவை) அல்லது பூலுவ ஊர்
எனும் அமைப்புக்களைக் கொண்டிருந்தனர். அடுத்து பூலுவ ஊரார் இணைந்து பூலுவ நாடு எனும் நாட்டர் அவையையும் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக அன்னூரிலிருந்து பூலுவ ஊர், சேவூரிலிருந்து பூலுவ ஊர், திங்களூரில் இருந்த வேட்டவூர், விசயமங்கலத்தில் செயல்பட்டு வந்த வேட்டவூரைச் சுட்டலாம்.

வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து, சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும்
வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக்
கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.

             
ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
              சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
              ........ஊராளி வேட்டுவன் அழகன்
              காளி அவன் இதில் பட்டான்.


சோழருக்குப் பின்னர்
சோழரை அடுத்துப் பிற்காலப் பாண்டியரும் ஒய்சாளரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். பாண்டியர் வில்லாற்றல் மிக்க
வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது
பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம்.
இதோ அக்கல்வெட்டு.

           
ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
            தேவற்கு யாண்டு 6 – வது
            வடகரை நாட்டு உரகடங்கச்சதி
            கண்ணையன் வேட்டுவரில்
            அந்தியூரன்


பட்டக்காரர்கள்
விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது, வேட்டுவரும் வேளாளரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர், தென்னிலை, காக்காவாடிப்
பட்டக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இதே காலக்கட்டத்தில் வேட்டுவத் தலைவர் சிலர் அரண்மையாளர்களாகவும் திகழ்ந்தனர்.
இவர்களுள் கொடையூர் சீத்தப்பட்டி, நிமந்தப்பட்டி, நவமரத்துபட்டி, நல்லகுமரன் பட்டி, இழுப்பக்கிணத்துப்பட்டி, அரண்மனையாளர்கள்
புகழுடன் விளங்கினர். வேட்டுவத் தலைவருள் பலர் காணியாளர்களாகவும் ஊராளிகளாகவும் திகழ்ந்தனர். இதனைப் பல கல்வெட்டுக்கள்
உறுதி செய்கின்றன.

மேற்கூறியவற்றான் வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்டிருந்த வேட்டுவர், நாளடைவில் படைவீரர்களாகவும்படைத்
தலைவர்களாகவும், காணியாளர்களாகவும், ஊராளிககளாகவும், திகழ்ந்தமை அறியப்படுகின்றன. சிலர் காடுகளை அழித்து கழனிகளாக
மாற்றி வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டனர் இவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதும் வாழ்ந்து வந்த போதிலும் வடகொங்கில் அதிக
எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி, நொய்யல், அமராவதிப்படுகைகளில் அவர்களது குடியிருப்புகள் மிகுதியாகவே இருந்தன.

வேட்டுவரின் குலப்பிரிவுகள்
வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த
குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது
குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வேட்டுவரின் வீரப்பண்பு
கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள், புலிக்குத்திக் கற்கள் ஆகியன வேட்டுவரின் வீரத்தையும், அஞ்சாமையும் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக கரையகுல சொக்கனின் பெருவீரத்தைப் போற்றிப் புகழும் பழமங்கலம்(பெரியார் மாட்டம்)
நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம்.

               
வாய்த்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
                சாய்த்த மருள் வென்ற சயம்பெருகச் சீர்த்த புகழ்
                நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச்
                சொக்கனேந்தலேவுலகிற் காண்.
                இக்கற்பொறி ரகூஷிப்பான் பாதம்என் தலை மேலே


வெட்ட வெட்டத் தலைக்குது வேட்டுவர் படை எனும் முதுமொழியும் வேட்டுவரின் வீரத்திற்கோர் இலக்கியமாகத் திகழ்கிறது.

புலியைக் குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதன் நினைவாகக் கொங்கு யநாட்டில் பல புலிக்குத்திக்கற்கள்
காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.

வேட்டிவரின் பொதுப்பணி
கால்வாய் வெட்டுதல், அணைகட்டுதல், குளம் வெட்டுதல், நீர்பாசனத்தைப் பெருக்குதல், ஊரில் புகுந்து மக்களுக்கும்,மாக்களுக்கும்,
தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக்
கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம். வேளாண்மையின் உயிர்நாடியாக, அச்சாணியாக விளங்கும் நீர்பாசனத்தைப் பெருக்குவதில்
வேட்டுவத் தலைவர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

சேலம் மாவட்டம் வடகரை ஆற்றூரில் வாழ்ந்து வந்த அல்லாளன் இம்முடித்திருமலை இளையான், காவிரியிலிருந்து ராஜ வாய்க்கால்
எனும் கால்வாயை வெட்டினான், ஜேடர்பாளையத்திலிருந்து வேலூர் வழியாகப் பாலப்பட்டி வரை சென்று ஒடுவந்தூரில் முடிவடையும்
இது காவிரியில் வெட்டப்பட்ட முதல் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சந்தை வேட்டுவன் பெரிய பெருமாள் முத்தாண்டன் என்பான், வடபரிசார நாட்டு நவிரையான கப்பலன் கிடாரன் எனும் ஊரில்
தாமரைக்குளம் ஒன்று வெட்டினான். பெரிய விளங்கி ஊராளியான சுண்டை வேட்டுவன் எழுகரை நாட்டில் அக்கசாலைக் கங்கை
எனும் பெயரில் குளம் ஒன்று வெட்டினான். இதனைக் கீழ்காணும் கல்வெட்டு விளக்குகிறது.

           
 ஸ்வஸ்தி ஸ்ரீ எழுகரை நாட்டு அக்கைசாலை
             கங்கை என்று பேரிட்டு இக்
             குளம் அட்டினேன் பெரிய விலங்கி
             ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
             சிலம்பன் சிறியன் ஆன எழுக
             ரை நாட்டு அக்கை சாலைகள் மாத்த
             ஆராத பிள்ளையேன் பேர் மலை


(சேலம் மாவட்டம், மூக்குத்தி பாளையம் அருகில் மோழப்பறையில் உள்ளது)

இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது.

இறைப்பணி
பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும், அதில் புதிய கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதிலும், இறைவனது திருவுருவங்களை எழுந்தருளச் செய்வதிலும், கோயில் வழிபாடு சிறப்புற நடைபெற நிலக்கொடைகள்
விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க்
கல்வெட்டை சுட்டாலாம். இதோ அக்கல்வெட்டு.

          
 ஸ்வஸ்திஸ்ரீ ஒய்சள புஜபல வீரவல்லாள
            தேவர்பிருத்வி ராஜ்யம் பண்ணி ஆருளா
            நின்ற யுவ சம்வத்சரத்துத் தை
            மாதத் தொருநாள் மேல்கரைப்
            பூந்துறை நாட்டு அறச்சலூரில்
            கரைய வேட்டுவரில் செய்யான்
            பல்லவரையனேன் இவ்வூர் புற்றிடங்
            கொண்டநாயனார் கோயிலில்
            திருக்கட்டளையில் திருநிலைக் காலும்
            படியும் செய்வித்தேன்.

           
           (புலவர் செ.இராசு அவர்கள் படித்தது)
வெங்கட்சி வேட்டுவன் ஒருவன் சங்ககிரி வட்டத்திலுள்ள மருதூரில் காளியம்மன் கோயிலைக் கட்டினான். அதியமான் நடுவில் நங்கன்
என்பான் பருத்திபள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். கல்லை வேட்டுவனான குறுஞ் சொக்கன் உலகடம் உலகேஸ்வரர் கோயிலில்
அர்த்த மண்டபத்தையும், பின்னப்படுத்தப்பட்ட இத் திருக்கோயிலைப் புதுப்பித்துக் குடமுழுக்கும் செய்வித்தான்.(கி.பி.1643)


வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்

  அண்டை வேட்டுவர்                  அரிச்சந்திர வேட்டுவர்
  அந்தி வேட்டுவர்                     அக்னி வேட்டுவர்
  அந்துவ வேட்டுவர்                   அன்னல் மீளவேட்டுவர்
  அல்லாள வேட்டுவர்                  ஆப்ப வேட்டுவர்
  அமர வேட்டுவர்             இரும்புலி (இரும்புளை) வேட்டுவர்
  ஆமை வேட்டுவர்                    இந்திர வேட்டுவர்
  இலங்கை வேட்டுவர்                  உண்ணாடி வேட்டுவர்
  ஈங்குறு வேட்டுவர்                   உதிர வேட்டுவர்
  உண்ணாடி வேட்டுவர்                 உம்பி வேட்டுவர்
  உத்திர வேட்டுவர்                    உயிர் வேட்டுவர்
  உயர வேட்டுவர்                      உறுமுக வேட்டுவர்
  உரிமைப் படை வேட்டுவர்            கஞ்சி வேட்டுவர்
  ஊராளி வேட்டுவர்                    கதிரிகளனை வேட்டுவர்
  கதிப்ப வேட்டுவர்                     கரட்டு வேட்டுவர்
  கதுகாலி வேட்டுவர்                   கருவளி வேட்டுவர்
  கரடி வேட்டுவர்                      கரும் புனித வேட்டுவர்
  கரிப்படை வேட்டுவர்                 கரைய வேட்டுவர்
  கருவண்ட வேட்டுவர்                 கவுண்டி வேட்டுவர்
  களங்க வேட்டுவர்                    கள்ளை வேட்டுவர்
  கற்பூர வேட்டுவர்                     கன்னி வேட்டுவர்
  காக்காவாடி வேட்டுவர்                காச வேட்டுவர்
  காட்டு வேட்டுவர்                     காரி வேட்டுவர்
  காவலர்                             காவலன் குறும்பில்லர்
  காவலன் மன்றாடி                    காவலன் மேலைக் கறையர்
  காவலன் வளவர்                     காவலர் வெண்கொற்றர்
  காடை வேட்டுவர்                    காரிய வேட்டுவர்
  காழைய வேட்டுவர்                   கிழங்க வேட்டுவர்
  கீரந்தை வேட்டுவர்                   கீரை வேட்டுவர்
  குடுமி வேட்டுவர்                     குருக்கல் வேட்டுவர்
  குளுவ வேட்டுவர்                    குறுங்காடை வேட்டுவர்
  குறும்ப வேட்டுவர்                   குறுண்டி வேட்டுவர்
  குன்னாடி வேட்டுவர்                  கூச்சந்தை வேட்டுவர்
  கூத்தாடி வேட்டுவர்                   கூரம்ப வேட்டுவர்
  கொடுகத்தாளி வேட்டுவர்              கொட்டாப் புலி வேட்டுவர்
  கொடுமுடி வேட்டுவர்                 கோமுக வேட்டுவர்
  கொல்லி வேட்டுவர்                   கொன்றை வேட்டுவர்
  கோதண்ட வேட்டுவர்                 கோமாளி வேட்டுவர்
  கௌதாரி வேட்டுவர்                  சரக்கு வேட்டுவர்
  சர்க்கரை வேட்டுவர்                  சாக்களி வேட்டுவர்
  சாதி வேட்டுவர்                      சாந்தப்படை வேட்டுவர்
  சித்ச வேட்டுவர்                      சித்த வேட்டுவர்
  சிலை வேட்டுவர்                     சிறத்தலை வேட்டுவர்
  சுண்ட வேட்டுவர்                     சுரண்டை வேட்டுவர்
  சுல்லி வேட்டுவர்                     சுறண் வேட்டுவர்
  செங்கண் வேட்டுவர்                  செம்ப வேட்டுவர்
  சேதாரி வேட்டுவர்                    சேர வேட்டுவர்
  சொட்டை வேட்டுவர்                 சொர்ண வேட்டுவர்
  தழும்ப வேட்டுவர்                    தரைய கரைய
  தாலி வேட்டுவர்                      திட்ட வேட்டுவர்
  தும்பை வேட்டுவர்                   துர்க்கை வேட்டுவர்
  பள்ள வேட்டுவர்                     பம்பை வேட்டுவர்
  பரந்தை வேட்டுவர்                   பருத்தி வேட்டுவர்
  பௌத்ரம் வேட்டுவர்                  மணிய வேட்டுவர்
  மலைய வேட்டுவர்                   மந்திர வேட்டுவர்
  மயில வேட்டுவர்                    மாடந்தை வேட்டுவர்
  மாச்சாடி வேட்டுவர்                  மாந்தப் படை வேட்டுவர்
  மான வேட்டுவர்                     முரட்டு வேட்டுவர்
  முகிழ வேட்டுவர்                     மும்முடி வேட்டுவர்
  முழக்க வேட்டுவர்                    முளை வேட்டுவர்
  முன்னை வேட்டுவர்                  மூளை வேட்டுவர்
  மூல வேட்டுவர்                      மொயர வேட்டுவர்
  மோளை வேட்டுவர்                  மோக்காளி வேட்டுவர்
  மின்ன வேட்டுவர்                    பலகை வேட்டுவர்
  பலத வேட்டுவர்                      பறவை வேட்டுவர்
  பரப்பள வேட்டுவர்                   பத்திர வேட்டுவர்
  பாண்டிய வேட்டுவர்                  பாசறை வேட்டுவர்
  பால வேட்டுவர்                      பாரி வேட்டுவர்
  பிரம்ப வேட்டுவர்                    பீச்ச வேட்டுவர்
  புன்னாடி வேட்டுவர்                   புதர வேட்டுவர்
  புன்ன வேட்டுவர்                     புட்ப வேட்டுவர்
  புலி வேட்டுவர்                       புள்ளை வேட்டுவர்
  பூச்சந்தை வேட்டுவர்                 பூவாணிய வேட்டுவர்
  பூலுவன் உத்தரர்                     பூலுவன் குப்பகள்
  பூலுவன் செய்யகள்                   பூலுவன் பெரும்பற்றார்
  பூலுவன் மயிலர்                     பூலுவ வேட்டுவர்
  பூழை வேட்டுவர்                     பெயர வேட்டுவர்
  பெருமாள் வேட்டுவர்                 பேரீஞ்சை வேட்டுவர்
  பொன்ன வேட்டுவர்                   மினுக்க வேட்டுவர்
  மீள வேட்டுவர்                       மின்ன வேட்டுவர்
  ராசி வேட்டுவர்                      வராக வேட்டுவர்
  வடுக வேட்டுவர்                     வன்னி வேட்டுவர்
  வாகை வேட்டுவர்                    விசயமங்கல வேட்டுவர்
  விளக்கு வேட்டுவர்                   வில்லி வேட்டுவர்
  விறகு வேட்டுவர்                    வினைய வேட்டுவர்
  வீர வேட்டுவர்                       வெங்கச்சி வேட்டுவர்
  வெள்ளை வேட்டுவர்                 வெற்ப வேட்டுவர்
  வேல் வேட்டுவர்                     வேந்தை வேட்டுவர்
  வேதகிரி வேட்டுவர்                  ஜெய வேட்டுவர்
  ஜெயவேந்த வேட்டுவர்

கரூவூர்க் கல்வெட்டில் பூவாணிய – திருவெஞ்சமாக் கூடல் கல்வெட்டில் கரடி, உயர – வெங்கம்பூர் கல்வெட்டில் புல்லி – குட்லாம் பாறைக்(நாமக்கல் வட்டம் வாழவந்தி அருகில்) கல்வெட்டில் இரும்புளை – பூலாம்பட்டி சோழப்பாறைக்(சங்ககிரி வட்டம்) கல்வெட்டில் பால – மதுரகாளியம்மன் ஓடையருகே உள்ள ஏரிக்கல்வெட்டில் (சங்ககிரி வட்டம்) வெங்கச்சி –மோழப்பாறைக் கல்வெட்டில் சுண்டை - ஏமூர் மாரியம்மன் கோயில் (நாமக்கல் வட்டம்) கல்வெட்டில் கிழங்க பழமங்கலம் (பெரியார் மாவட்டம்) கல்வெட்டில் கரைய. அந்தியூர்க் (பவானி வட்டம்) கல்வெட்டில் பாசறை – கிடாரம்(கோபி வட்டம்) கல்வெட்டில் பூச்சந்தை – முதலான வேட்டுவ குலப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேட்டுவர் புகழ்பாடும் குருகுல காவியம், பஞ்சவர்ண ராஜ காவியம் ஆகியவை வேட்டுவரின் பல்வேறு குலங்களைச் சுட்டுகின்றன.
வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகரதங்கமணி

நன்றியுரை
இக்கட்டுரையை இணைய தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதி அளித்த வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகர தங்கமணி அவர்களுக்கும், இக்கட்டுரை ஆவணத்தை வழங்கிய கொங்கு மண்டல வரலாற்று ஆய்வாளர் திரு.பூலுவராஜன் அவர்களுக்கும், நமதுசமூக வரலாற்று கட்டுரைகளை இணைய தளத்தில் பதிப்பித்து எனக்கு ஊக்கம் அளித்து வரும் திரு.எம்.எஸ்.மோகன்குமாரவேல் (பெங்களூர்) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆர்.முத்துசாமி(9940701039)
புஞ்சை புளியம்பட்டி